புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகனும், மணமகளும் தங்கள் உறவினர்களோடு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் தர்பா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனத்தை 3 மர்ம நபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த நிலையில், துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டி மணப்பெண்ணை கடத்திச் சென்றனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் மாப்பிள்ளையும், உறவினர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தர்பா காவல் நிலையத்தில் ஹரிபந்து பட்டேல் புகார் அளித்தார். இதற்கிடையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணப்பெண்ணை கடத்திச் சென்றவர் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.