பெங்களூரு,
கர்நாடக மாநிலம், துமகூருவில் முன்னாள் காதலியை கொல்ல திட்டமிட்டு, காதலனே அந்த சூழ்ச்சி வலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூருவில் வசித்து வந்த நாகேந்திரா (30) என்பவரும், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் ரம்யா உல்லாஸ் (23 வயது), கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த நாகேந்திரன் நேற்று சம்பந்தப்பட்ட பெண் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்று, அவரை வலுக்கட்டாயமாக தனது காரில் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ரம்யாவின் பெற்றோர் ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே காரில் சென்றுக்கொண்டிருந்த போது கொலை செய்து விடுவேன் என அப்பெண்ணை நாகேந்திரா மிரட்டியுள்ளார். மேலும் காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜோகிஹள்ளி அருகே சென்றுக்கொண்டிருக்கும்போது வாக்குவாதம் முற்றி, நாகேந்திரா அப்பெண்ணை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார். அச்சமயம் பார்த்து ரம்யா காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார். ரம்யா குதித்த சில நிமிடங்களில் காரில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி நாகேந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கல்லம்பெல்லா போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.