மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும், கனமழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனிடையே, அம்மாநிலத்தின் தானே மாவட்டம் மீரா பயந்தர் நகராட்சியின் முன்னாள் மேயர் அசோக். இவரது மகன் ராகுல். இவர் நேற்று மாலை தானே மாவட்டத்தின் சதானந்த் நகர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த தென்னை மரம் முடிந்து பைக்கில் சென்ற ராகுல் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராகுலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.