புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 9-ந் தேதி நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன. இதே போல் த.வெ.க.. நேயம் மக்கள் கழக கட்சியுடன் இணைந்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது.
இதனால் புதுவை மாநிலத்தில் 4 முனை கடும் போட்டி நிலவியது. அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என புதுவையில் 294 பேர் தேர்தலை சந்தித்தனர். புதுவையில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுவை லாஸ்பேட்டை மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஏனாமில் எஸ்.ஆர்.கே. அரசு கலைக்கல்லூரியிலும் உள்ள பாதுகாப்பு அறைகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு துணை ராணுவத்தினர், ஐ.ஆர்.பி.என். போலீசார், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. துப் பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுவையில் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது.
இந்நிலையில் நாளை புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை ஒட்டி புதுச்சேரியில் நாளை (மே 4) மதுபான கடைகள், ரெஸ்டோ பார், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என்று கலால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.