வெடி விபத்து 
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சாலைப் பணிக்காக வைக்கப்பட்ட வெடி: பள்ளி ஆசிரியர் உள்பட 5 பேர் பலி

அந்த சமயத்தில் அதே சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சுனிதா என்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மீதும் வெடிபொருட்கள் பாய்ந்ததில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக பாறைகளை தகர்க்க வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்து சிதறிய கோர விபத்தில், பள்ளி ஆசிரியர் உள்பட5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலைப்பாதையில் சாலைப் பணி

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மண்டலத்திற்கு உட்பட்ட பினகோட்டா கிராம மலைப்பாதையில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வாகனம் ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

தீப்பொறியால் நேரிட்ட விபத்து

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அன்று அந்த வாகனத்தில் டீசல் நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீப்பொறி வெடிபொருட்கள் மீது பரவியுள்ளது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிபொருட்கள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

பள்ளி ஆசிரியர் உள்பட 5 பேர் பலி

இந்த விபத்தின் வீரியத்தால், சம்பவ இடத்திலேயே வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் 3 கட்டுமானத் தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், அந்த சமயத்தில் அதே சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சுனிதா என்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மீதும் வெடிபொருட்கள் பாய்ந்ததில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாகனங்கள் தீக்கிரை - போலீஸ் விசாரணை

இந்த பயங்கர வெடி விபத்தில் அங்கிருந்த 2 கட்டுமான வாகனங்கள் முற்றிலும் தீக்கிரையாகி உருக்குலைந்தன. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் வருவாய்த்துறையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, உடல்களை கைப்பற்றினர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT