தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் குளிர்: பஹல்காமில் மைனஸ் 3.2 டிகிரி வெப்பநிலை பதிவு

இரவு நேர வெப்ப நிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகரில் நேற்று மைனஸ் 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பதிவான மிக குளிரான இரவு இது ஆகும். பஹல்காமில் மைனஸ் 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது முந்தைய இரவில் பதிவான மைனஸ் 3.6 டிகிரி செல்சியசைவிட சற்று உயர்வாகும். நேற்று காலை பள்ளத்தாக்கின் பல பகுதிகள் மூடுபனியால் சூழப்பட்டு இருந்தன. தெற்கு காஷ்மீரில் பள்ளத்தாக்குக்கான நுழைவு வாயிலாக கருதப்படும் காசிகுண்டில், மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், "காஷ்மீரில் சில பகுதிகளில் இரவு நேர வெப்பநிலையில் சற்று உயர்வு காணப்பட்டாலும், பல இடங்களில் வெப்பநிலை இன்னும் உறைநிலைக்கு கீழே நீடிக்கிறது. வட காஷ்மீரின் குப்வாராவில் மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பனிச்சறுக்கு மையமான குல்மார்க்கில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின. இந்த மாதம் இறுதி வரை பள்ளத்தாக்கில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இரவு நேர வெப்ப நிலை மேலும் குறைய வாய்ப்புள்ளது” என கூறியுள்ளது.

SCROLL FOR NEXT