உப்பார்பேட்டை,
பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் போலி சிகரெட்டுகள் விற்பனை செய்ய முயன்ற 2 பேரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் முகமது ரியாத் மற்றும் குமரன் என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் 2 டிராலி பேக்குகளில் போலி சிகரெட்டுகளை எடுத்து வந்து, இங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்த போலீசார், 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், உப்பார்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றிய ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது. அதற்குள் போலி சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.