தேசிய செய்திகள்

நீதிபதி பெயரில் போலி அடையாள அட்டை; 2 பேர் கைது: துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

டெல்லி போலீசார் நாடாளுமன்றம் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லி போலீசார் அடிக்கடி வாகன சோதனையை தீவிரப்படுத்துவது வழக்கம். இந்த வகையில் நாடாளுமன்றம் தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உத்தரபிரதேச மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரின் பக்கவாட்டு கண்ணாடிகள் கருப்பு நிறமாக இருந்தன. ஆனால் காரின் முன்பு நீதிபதி என எழுதப்பட்டிருந்தது. இருப்பினும், காரின் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

இதனை தொடர்ந்து காரை மறித்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே 2 நபர்கள் இருந்தனர். அவர்களில் சூர்யா அகர்வால் (வயது 31) என்பவர் தன்னை நீதிபதி என கூறினார். உடன் இருந்த நிகில்(21) என்பவர் அவருடைய நண்பர் என தெரிய வந்தது.

அவர்களது பேச்சில் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தனர். அப்போது அவை போலி என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.