கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம், பாலுராகி கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய். இவருக்கும் ஷைலா (வயது 28) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் ஷைலாவுக்கும், மற்றொரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த அக்ஷய் தனது மனைவியின் கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனால் அதனை கேட்காமல் ஷைலா தனது கள்ளக்காதலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அக்ஷய், ஷைலாவையும், தனது பெற்றோரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் கங்காபுராவுக்கு அருகில் தனது காரை நிறுத்தி ஷைலாவை காரில் இருந்து வெளியே இழுத்த அக்ஷய், அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஷைலா, கணவரிடம் இருந்து தப்பி ஓடினார்.
அவர் அருகில் இருந்த வயலுக்குள் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். இதனை பார்த்த அக்ஷய் தனது காரை எடுத்துக்கொண்டு ஷைலாவை விரட்டிச் சென்று மோதினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷைலா மீது காரை அக்ஷய் ஏற்றினார். இதில் ஷைலா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இந்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் சிலர் ஷைலாவை காப்பாற்ற கற்கள், கட்டைகளை அக்ஷய் மீது வீசி எறிந்தனர். ஆனாலும் அவர் மனைவியை கொலை செய்வதில் தீவிரமாக இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்ஷய் மற்றும் அவரது பெற்றோர் என 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.