சண்டிகர்,
கார் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பொலோவாஸ் கிராமத்தை சேர்ந்த தீபக் தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான சரிதா, நிதின், திவ்யா மற்றும் 5 வயது குழந்தையுடன் நேற்று முன் தினம் சொந்த ஊர் சென்றுள்ளார்.
பின்னர், அனைவரும் காரில் நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியானாவின் ரிவாரி மாவட்டம் பனிபூர் சவுக் பகுதியில் சென்றபோது பருப்பு மூட்டைகளை ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தீபக், சரிதா, நிதின், திவ்யா ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.
5 வயது குழந்தை மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.