தேசிய செய்திகள்

அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து தெளித்த விவசாயி; வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மகள்கள் உயிரிழப்பு

அறுவடை செய்த கொண்டைக்கடலையை விவசாயி மல்லேஷ் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்திருந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ் தேபேகர். விவசாயியான இவருக்கு ஆரோகி(வயது6), ஆராத்யா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர். மல்லேஷ் தனது நிலத்தில் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்திருந்தார். அதில் பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காக, பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மல்லேஷ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதே அறையில் தூங்கினர். தூங்கும்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களையும் அவர்கள் மூடி வைத்து இருந்தனர். இதனால் கொண்டைக்கடலையில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்ததில் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வாந்தி எடுக்க தொடங்கினர்.

இதில் பிஞ்சு குழந்தைகளான ஆரோகி மற்றும் ஆராத்யா ஆகியோர் நிலைகுலைந்து கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பூச்சி கொல்லி மருந்தின் தாக்கத்தால் அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பாலாப்பூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி களின் உடல்களுக்கு நேற்று கிராம மக்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் கண்ணீர் மல்க நடத்தப்பட்டன.

SCROLL FOR NEXT