தேசிய செய்திகள்

ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி

ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர்.

புதுடெல்லி,

விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர். ரெயில்களிலும், பஸ்களிலும், பிற வாகனங்களிலும் வந்த அவர்கள் போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து, தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து ராம்லீலா மைதானம் சென்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணியாக விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். விவசாயிகள் பேரணியையொட்டி, 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT