மீரட்,
உத்திர பிரதேசம் மாநிலத்தில் தனது மகள் இறந்த பிறகு, அவரது உடலை கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக வீட்டிற்குள் வைத்திருந்த 72 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சதர் பஜார் காவல் நிலையப் பகுதியிலுள்ள டெலி மொஹல்லாவைச் சேர்ந்த உதய்பானு பிஸ்வாஸ், தனது 35 வயது மகள் பிரியங்கா இறந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குகளை செய்யாமல், உடலை வீட்டின் பூட்டப்பட்ட அறையில் வைத்திருந்தார். வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
டிசம்பர் 1, 2025 அன்று பிரியங்கா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஸ்வாஸ் பல நாட்கள் உடலுடன் வீட்டிலேயே தங்கியிருந்து, துர்நாற்றத்தை அடக்குவதற்காக வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வீட்டிலிருந்து அழுகிய நிலையில் இருந்த சடலத்தை காவல்துறை மீட்டது. சடலம் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் அது பெரும்பாலும் எலும்புக்கூடாக மாறியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றிய உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பிஸ்வாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பிஸ்வாஸ் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் கல்வித் துறையில் இருந்து ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஆவார். சர்தார் வல்லபாய் படேல் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு மனநல சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினர்.