தேசிய செய்திகள்

பெற்ற மகளிடமே பாலியல் வன்கொடுமை- தந்தையை சுட்டுப்பிடித்த போலீஸ்

சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் நடைபெறுவதாக உள்ளூர் கிராமவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

லக்னோ,

உத்ரப்பிரதேசம் மாநிலத்தில் பெற்ற மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

உத்ரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஷர்ரப். இவர் தனது மைனர் மகளிடம் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த உள்ளூர் கிராமவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முஷர்ரப் தனது சொந்த மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தெரியவந்தது. ஆனால் போலீசார் வருகையை அறிந்த முஷர்ரப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பதேபூர் காட் முதல் திக்ரி வரையிலான சாலையில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.

என்கவுன்டர்

அப்போது ​​ஒரு பகுதியில் முஷர்ரிப்பை போலீசார் அடையாளம் கண்டு அவரை சுற்றி வளைத்தனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதால் முஷர்ரிப் தான் வைத்திருந்த துப்பாக்கியால் காவலர்களை சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் காவல் துறையினர் தங்களின் தற்காப்புக்காக முஷர்ரப் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

கைது

இதில் முஷர்ரப்பின் இரண்டு கால்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. படுகாயமடைந்த முஷர்ரப் குண்டுகள் பாய்ந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் அவரிடமிருந்து சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி ஒன்று, இரண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு காலித் தோட்டா உறைகள் போலிசாரால் மீட்கப்பட்டன. முஷர்ரப் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.