பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தின் கடக் நகரில், ஒரு தந்தை தனது குழந்தையை லக்கேஜ் பைக்குள் வைத்து அதை இரு சக்கர வாகணத்தின் பக்கவாட்டில் தொங்கவிட்டபடி பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திப்பு சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையின் தலை மட்டும் வெளியே தெரியும் வகையில் பைக்குள் வைத்திருந்ததால், பை அறுந்து விழுந்தாலோ அல்லது குழந்தை தவறி கீழே விழுந்தாலோ உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. இதை கண்டு பொதுமக்கள் எச்சரித்தபோதும், அவர் அதை பொருட்படுத்தாமல் தனது பயணத்தை தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய தந்தையின் செயலுக்கு எதிராக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீடியோவில் வண்டியின் எண் தெளிவாக தெரிந்ததால், போக்குவரத்து துறையின் தரவுத்தளத்தை பயன்படுத்தி அந்த நபர் யார், அவரது முகவரி என்ன என்பதைப் போலீசார் சில மணி நேரங்களிலேயே கண்டுபிடித்தனர்.
முகவரியை அடையாளம் கண்டவுடன், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் அந்த நபரை நேரில் வரவழைத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, 'குழந்தை உங்களுடையதாகவே இருந்தாலும், இப்படி ஆபத்தான முறையில் கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் மற்றும் தண்டனைக்குரியது' என்று கூறி அவருக்குப் போலீசார் கடுமையான அபராதம் விதித்தனர்.