தேசிய செய்திகள்

சாம்பார் வைக்காததால் தந்தை கண்டிப்பு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

நட்டேஸ் பூஜாரி வீட்டிற்கு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தேவருந்தா கிராமத்தை சேர்ந்தவர் நட்டேஸ் பூஜாரி. இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நட்டேஸ் பூஜாரி தனது மகள் கவுசல்யாவுடன் (வயது 22) அதே கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று நட்டேஸ் பூஜாரி வீட்டிற்கு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்துள்ளார். அவற்றை மகள் கவுசல்யாவிடம் கொடுத்து, மதிய உணவிற்கு சமைத்து வைக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து நட்டேஸ் பூஜாரி வீட்டிற்கு திரும்பிய போது, கவுசல்யா சாப்பாடு மட்டும் செய்துவிட்டு சாம்பார் வைக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நட்டேஸ் பூஜாரி, தனது மகளை கடு மையாக திட்டியுள்ளார். இதனால் கவுசல்யா மனமுடைந்தார். இதற்கிடையே, வீட்டில் சாம்பார் இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்று சாம்பார் வாங்கி வருவதற்காக நட்டேஸ் பூஜாரி சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற அந்த சமயத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்த கவுசல்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறிது நேரம் கழித்து சாம்பார் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய நட்டேஸ் பூஜாரி, தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். கவுசல்யாவை மீட்க முயன்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.