தேசிய செய்திகள்

மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

குருகிராம்,

மகன் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரா (வயது 45). இவர் சதர் பஜாரில் துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மகன்கள் சாஹில் (வயது 21) மற்றும் பிரியான்ஷ். மூத்த மகன் பிரியான்ஷ், கடந்த 2025-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.

மகேந்திராவும் அவரது மகன் சாஹிலும் இணைந்து துணிக்கடையை நடத்தி வந்தனர். நேற்று காலை 9.30 மணியளவில் கடையை திறப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்றனர். மகேந்திரா வாகனத்தை ஓட்ட, சாஹில் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களின் வாகனத்தை வழிமறித்தனர். பின்னர், நடுவில் இருந்த நபர் துப்பாக்கியை எடுத்து மகேந்திராவை மிக அருகில் இருந்து சுட்டார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மகேந்திரா கீழே விழுந்தார். உடனே சாஹிலும் அங்கிருந்த பொதுமக்களும் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மகேந்திரனின் மூத்த மகன் ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவரை பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என மகேந்திரனின் மற்றொரு மகன் சாஹில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT