காஜல் 
தேசிய செய்திகள்

செல்போனை உடைத்த தந்தை: குக்கர் மூடி, கத்தியால் தாக்கிக் கொன்ற மகள் கைது

கோபமடைந்த ரமேஷ், வீட்டிற்கு வந்தவுடன் மகளைக் கண்டித்ததுடன் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி தரையில் வீசி உடைத்துள்ளார்.

காந்தி நகர்,

குஜராத் மாநிலத்தில் எப்போதும் மொபைல் போனில் கேம் விளையாடுவதைக் கண்டித்து, தந்தை போனை கீழே தூக்கி எறிந்து உடைத்ததால் ஆத்திரமடைந்த 22 வயது மகள், தந்தையை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் கேமில் மூழ்கிய மகள்

குஜராத் மாநிலம் சூரத் நகரின் கோசாட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சவுகான் (வயது 55). இவரது மகள் காஜல் (வயது 22). காஜல் வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் எப்போதும் தனது செல்போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி அன்று, இரவு ரமேஷ் சவுகான் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, மகள் போன் உபயோகிப்பது குறித்து அவரது மனைவி மஞ்சுளா கணவரிடம் புகாரளித்துள்ளார்.

தகராறு- கொடூரத் தாக்குதல்

இதனால் கோபமடைந்த ரமேஷ், வீட்டிற்கு வந்தவுடன் மகளைக் கண்டித்ததுடன் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி தரையில் வீசி உடைத்துள்ளார். தனது போன் உடைந்ததால் கடும் ஆத்திரமடைந்த காஜல், சமையலறையில் இருந்த பிரஷர் குக்கரின் மூடியை எடுத்து தந்தை ரமேஷின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். மேலும், சமையலறை கத்தியை எடுத்து அவரது வயிற்றிலும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

மரணம் -கைது

ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷை அவரது குடும்பத்தினர் மீட்டு சூரத் சிவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்துத் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அம்ரோலி போலீசார், தந்தை ரமேஷைக் கொலை செய்த குற்றத்திற்காக மகள் காஜலைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT