தேசிய செய்திகள்

ஆந்திராவில் எரிபொருள் தட்டுப்பாடு என அச்சம்: பெட்ரோல் பங்குகளில் குவியும் வாகன ஓட்டிகள்

அதிக தேவை காரணமாக, நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் "இருப்பு இல்லை" என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா- ஈரான் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு என அவ்வப்போது கிளம்பும் வதந்திகளால் எரிவாயு நிலையங்களில் வாகன ஓட்டிகள் திரளும் நிலையை காண முடிகிறது. அந்த வகையில், ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீதி அடைந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர்.

இதனால், ஆந்திராவில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களும் அணிவகுத்து நின்றன. டேங்குகளை புல் செய்து கொண்டதையும் பார்க்க முடிகிறது.அதிக தேவை காரணமாக, நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் "இருப்பு இல்லை" என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்த புகார்களை அடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆந்திராவில் மொத்தமுள்ள 4,510 எரிபொருள் நிலையங்களில் சுமார் 421 பங்குகள் தற்போது மூடப்பட்டுள்ளன. வழக்கமான நாட்களில் மாநிலத்தின் சராசரி தினசரி விற்பனை 6,330 கிலோ லிட்டர் பெட்ரோல் மற்றும் 9,048 கிலோ லிட்டர் டீசல் என்ற அளவில் இருக்கும் நிலையில், தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் அச்சத்தால் இந்தத் தேவை திடீரென அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.