தேசிய செய்திகள்

சொகுசு கப்பலில் விருந்து; நாப்கினுக்குள் மறைத்து போதை பொருள் கடத்திய பெண்

கோவா சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் பெண் ஒருவர் நாப்கினுக்குள் மறைத்து போதை பொருளை கடத்தியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக, போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு கப்பலில் சாதாரண பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், ஆர்யன் கான், அர்பாஸ் சேத் மெர்சன்ட் மற்றும் மாடல் அழகி முன்முன் தமீச்சா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை மும்பை எஸ்பிளனேடு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில், மும்பை பந்திரா பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சோதனைகள் நடத்தி உள்ளன.

இந்த வழக்கில், ஆர்யன் கானின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால், சனி மற்றும் ஞாயிறு அவர் காவலில் வைக்கப்படுவார். நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 18 பேர் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரியை நாளை நேரில் ஆஜராகும்படி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. அவருக்கு பாலிவுட் நடிகர்கள் பலருடன் நேரடி தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதை பொருள் வினியோகித்த வழக்கிலும் கத்ரி மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்கில் கூடுதலாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில், போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், கோவா சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ள பெண் ஒருவர் நாப்கினுக்குள் போதை பொருட்களை மறைத்து வைத்து, கப்பலுக்கு வந்துள்ளார் என கூறியுள்ளனர்.