ராய்ப்பூர்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இருந்து புனே நோக்கி இன்று, 6இ-135 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனால், சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதுபற்றி விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், விமான பயணத்தின்போது பெண் பயணி சுயநினைவை இழந்து விட்டார். இதனால் விமானி உடனடியாக, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அவசரகால மருத்துவ உதவியை நாடினார். இதனை தொடர்ந்தே ராய்ப்பூரில் அவசர தரையிறக்கம் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதன்பின்னர் அந்த பெண் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். தேவையான நடைமுறைகள் நிறைவடைந்ததும், நிலைமை சீரானதும் மதியம் 1 மணியளவில் விமானம் புனே நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனை அதிகாரிகள் தெரிவித்தனர்.