தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் நாளை மறுநாள் நிதி மசோதா பரிசீலனை - மத்திய மந்திரி தகவல்

மக்களவையில் நிதிநிலை அறிக்கை ஒப்புதலுக்கான நடைமுறை இன்று நிறைவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2026-ம் ஆண்டுக்கான நிதி மசோதா 32 அரசுத் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மக்களவையில் நிதிநிலை அறிக்கை ஒப்புதலுக்கான நடைமுறை நிறைவு செய்யப்பட்டது.

இனி நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைக்கு இந்த மசோதா பரிசீலனைக்காக அனுப்பப்படும். மாநிலங்களவை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த பிறகு, 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை செயல்முறை நிறைவடையும்.

இதன்படி, மாநிலங்களவையில் நாளை மறுநாள் நிதி மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். முன்னதாக மாநிலங்களையில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகளின் நிரல் குறித்து அவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டார்.

இதற்கு கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், “மார்ச் 26-ந்தேதி விடுமுறை என்பதால் அன்றைய தினம் மாநிலங்களவை நடைபெறாது. பொதுவாக அவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமைகளில் தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்துவார்கள். இருப்பினும், வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 27-ந்தேதி நிதி மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

முன்னதாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நடத்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வார விடுமுறையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மார்ச் 30 முதல் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் செயல்படும்” என்று தெரிவித்தார்.