தேசிய செய்திகள்

8 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா, கனடா செல்கிறார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நிர்மலா சீதாராமன் நாளை புறப்பட உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆகஸ்ட் 25-ந்தேதி(நாளை) முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 8 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது, ​​ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின்(FMCBG) கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.

அதோடு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்தும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது கனடா பயணத்தின் முதல் கட்டத்தின்போது, ​​அந்நாட்டின் நிதி மற்றும் தேசிய வருவாய் மந்திரி பிரான்கோயிஸ்-பிலிப் ஷாம்பெய்னுடன் நடைபெறும் தொடக்கப் பொருளாதார மற்றும் நிதி உரையாடலில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையானது, புதுப்பிக்கப்பட்ட இந்தியா-கனடா இடையிலான கூட்டாண்மையின் பொருளாதார மற்றும் நிதிசார் அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், பொருளாதார நிலவரங்கள், நிதித் துறை ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பகிரப்பட்ட சர்வதேச முன்னுரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு செயற்கை நுண்ணறிவு மற்றும் முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி வணிகப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் முதலீட்டு வட்டமேசை மாநாட்டிலும் நிர்மலா சிதாராமன் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டொரோண்டோவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து நிர்மலா சீதாராமன் கலந்துரையாட உள்ளார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது ஆகஸ்ட் 28-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை சிகாகோ, ஆஷ்வில் மற்றும் நியூயார்க் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ளார்.

சிகாகோவில் நடைபெறும் முதலீட்டாளர் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்கும் நிர்மலா சித்தாராமன், இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் வணிக கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து விவாதிப்பதற்காக தனியார் துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் மூத்த பிரதிநிதிகளை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், நிர்மலா சீதாராமன் வடக்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில் (Asheville) நகருக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு, அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் (FMCBG) கூட்டத்தில் இந்திய குழுவிற்கு நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நியூயார்க் நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வட்டமேஜை கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்வார் என்றும், நிதித்துறையைச் சேர்ந்த உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (CEO) தனிப்பட்ட முறையில் சந்திப்புகளை நடத்துவார் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.