பள்ளி மாணவர்கள்- ரேகா குப்தா 
தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பைகள் வாங்க தலா ரூ1,370 நிதியுதவி

2026-27-ம் கல்வியாண்டில் மொத்தம் 6,56,950 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையத் தகுதி பெற்றுள்ளனர்.

டெல்லி,

டெல்லி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பைகள் வாங்க தலா ரூ1,370 நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தொடங்கிவைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி

டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு சீருடை மற்றும் பள்ளிப் பைகள் வாங்குவதற்காக தலா ரூ.1,370 நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் மாணவர்களின் கணக்குகளுக்கு இந்த தொகை உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது.

பணப் பகிர்வு -பயனாளிகள்

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,370 நிதியில், சீருடைக்காக ரூ.1,250 மற்றும் பள்ளிப் பைகளுக்காக ரூ.120 எனப் பிரித்து வழங்கப்படுகிறது. 2026-27-ம் கல்வியாண்டில் மொத்தம் 6,56,950 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையத் தகுதி பெற்றுள்ளனர்.

முதற்கட்டமாக ரூ.70 கோடி விடுவிப்பு

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, துல்லியமான வங்கி கணக்கு விவரங்களைக் கொண்டுள்ள 5.1 லட்சம் மாணவர்களின் கணக்குகளுக்கு சுமார் ரூ.70 கோடி நிதி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்குகளைத் தொடங்கவும், முடங்கியுள்ள கணக்குகளைப் புதுப்பிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

புத்தகங்கள் -எழுதுபொருட்கள் விநியோகம்

இதற்கு முந்தைய ஆண்டுகளில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்காக மாணவர்களுக்கு ரூ.300 ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் அந்த நடைமுறை மாற்றப்பட்டு, பணத்திற்குப் பதிலாக பள்ளிகள் மூலமாகவே நோட்டுப் புத்தகங்களும் எழுதுபொருட்களும் மாணவர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் டெல்லி மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT