புதுடெல்லி,
பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘டெல்லி லட்சாதிபதி மகள் திட்டம்’ (Lakhpati Beti Yojana) என்ற திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது அவர் கூறியதாவது;-
“டெல்லியின் மகள்களுக்காக இன்று நாங்கள் புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்தின்படி, டெல்லியில் பெண் குழந்தைகளின் பிறப்பு முதல் அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அரசாங்கம் அவர்களின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் 56 ஆயிரம் ரூபாய் செலுத்தும்.
இதன்படி ஒரு பெண் பட்டப்படிப்பை முடிக்கும்போது, அவரது கணக்கில் அரசு செலுத்தி வந்த தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இதன் மூலம் டெல்லியின் மகள்கள் பட்டப்படிப்பை முடிக்கும்போது லட்சாதிபதிகளாக வெளியே வருவார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின்படி, பெண் குழந்தைகள் பிறக்கும்போதே அவர்களின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதில் ரூ.11 ஆயிரம் செலுத்தப்படும். பின்னர் அந்த குழந்தை 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ஆகியவற்றை நிறைவு செய்யும்போது தலா ரூ.5 ஆயிரம் செலுத்தப்படும். பின்னர் பட்டப்படிப்பு முடிக்கும்போது ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.