தேசிய செய்திகள்

பின்லாந்து ஜனாதிபதி இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை

என்னுடைய இந்திய வருகை, பின்லாந்து மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் என பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் கூறினார்.

புதுடெல்லி

பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி வந்தடைந்த அவரை மத்திய வெளிவிவகார துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.

அவருடைய இந்த பயணத்தில், பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார். அப்போது பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்திற்கு முன்பு அதுபற்றி பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் கூறும்போது, என்னுடைய இந்திய வருகையானது, பின்லாந்து மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் என கூறினார். அவர் நாளை மாலை நடைபெற உள்ள ரெய்சினா பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.

அவருடைய இந்த பயணம், வர்த்தகம், முதலீடு மற்றும் முக்கியத்துவம் பெற்ற தொழில் நுட்பம் உள்ளிட்ட பரவலான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்.