மத்தியபிரதேச மாநிலம் சிங்க்ராலியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ஷாவின் தனியார் காரை, தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிலவுஞ்சி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.வின் அரசு இல்லத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்பு வாகனத்துடன் வந்த 3 பணியாளர்கள் குழாய் மூலம் காரின் மீது தண்ணீர் பீய்ச்சி கழுவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, அவசரகால பணிகளுக்காக பயன்படுத்த வேண்டிய தீயணைப்பு வாகனத்தை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தியது எப்படி? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத்தியபிரதேச எதிர்க்கட்சி தலைவர் உமங் சிங்கார், இந்த விவகாரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமக்களின் வீடுகளில் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் தீயணைப்பு வாகனம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலையில், அதை தனிப்பட்ட கார் கழுவ பயன்படுத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ஷாவிடம் கேட்டபோது, இந்த சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் நான் இல்லை என்றும், காரை யார் கழுவச் செய்தார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார். மேலும், தீயணைப்பு வாகனம் அங்கு ஏன் வந்தது என்பதை மாநகராட்சி அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.சிங்க்ராலி மாநகராட்சி ஆணையர் சவிதா பிரதான், இந்த சம்பவம் குறித்து தனக்கு தகவல் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அரசு வாகனம் தனியார் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.