தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உயர் தளபதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராணுவம், காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்திற்கு தொடர்ந்தது. அப்போது திடீரென பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உயர் தளபதியான ருபானி என்கிற அபு மாவியா ஆவார். இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.