தேசிய செய்திகள்

சிம்லாவில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலியான சோகம்

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிம்லா,

சிம்லாவில் வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்து

சிம்லாவின் தரோட்டி பகுதியில் உள்ள பானு நல்லா அருகே, குஷல் என்ற வாலிபர் தனது தாயையும் சில தொழிலாளர்களையும் தனது பண்ணை வேலைக்கு அழைத்துச் சென்றபோது திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

தரோட்டியை சேர்ந்த குஷல் மற்றும் அவரது தாய் கல்பனா தேவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த நிர்மலா, மீனா மற்றும் ரோஷ்னி ஆகிய மூன்று பெண்களும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு

காயமடைந்தவர் முதலில் ரோஹ்ருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு (IGMC) அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உடனடி நிவாரணம்

அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.15,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT