தேசிய செய்திகள்

ஆந்திரா; கார் விபத்தில் கைக்குழந்தை உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சோகம்!

நீரோட்டம் அதிகமாக இருக்கும் கால்வாயில் கவிழாமல் இருப்பதற்காக பாலத்தின் தடுப்பில் மோதிய கார் அப்பளம் போல நொறுங்கியது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஜக்கையாபேட்டை பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் 6 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் கவுரவரம் கிராமம் அருகே நாகார்ஜுன சாகர் கால்வாய் பாலத்தில் அவர்கள் கார் பயணித்துக் கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கார் உருக்குலைந்தது. அதில், காரில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனர். அந்த காரில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 1 குழந்தை என 5 பேர் பயணித்தனர்.

சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்து விட்டனர். படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தற்போது கால்வாயில் அதிகபட்ச அளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கார் சாலை தடுப்பில் மோதாமல் இருந்திருந்தால், கால்வாயில் விழுந்திருக்கும் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

காரில் பயணித்த அனைவரும் ஐதராபாத்தில் உள்ள சந்தாநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடெம் பகுதியில் நடைபெறும் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

இந்த விபத்து குறித்து ஆந்திரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.