தேசிய செய்திகள்

பம்பையில் வெள்ளப்பெருக்கு - சபரிமலை பக்தர்கள் பயணத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

கேரளாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக பம்பா நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழையால் பம்பா நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு, சபரிமலை பக்தர்கள் பயணத்தை தவிர்க்க அவசர எச்சரிக்கை! திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு.

நிறை புத்தரிசி வழிபாடு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் விவசாயம் செழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான பூஜையை முன்னிட்டு நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

ஊர்வலம்

இந்த வழிபாட்டுக்காக பாலக்காடு, ஆரன்முலா மற்றும் செட்டி குளங்கரா, தென்காசி வயல்களில் இருந்து அறுவடை செய்த நெல்லை பட்டு துணியில் தனித்தனி கட்டுகளாக கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாளை ஊர்வலமாக புறப்பட்டு பாரம்பரிய கோவில்கள் வழியே பவனிவந்து ஆக.3ம் தேதி சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.

சிறப்பு பூஜை

இந்த நெற்கதிர்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், நோய் நொடிகள் விலகும். விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பக்தர்களுக்கு அவசர உத்தரவு

இந்த நிலையில், கேரளாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக பம்பா நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள புகழ்பெற்ற ‘நிறபுத்தரி’ பூஜையில் கலந்து கொள்வதற்காக, ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சபரிமலைக்கு வர திட்டமிட்டிருக்கும் பக்தர்கள், தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐயப்பன் கோவில்

பக்தர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன. பம்பை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுவதால், பக்தர்கள் தற்போதைக்கு தங்களின் சபரிமலை யாத்திரையை தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT