புதுடெல்லி,
இந்திய அரசியல் அரங்கில் இதுவரை கண்டிராத ஒரு புதிய டிஜிட்டல் நையாண்டிப் புரட்சி சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளது. 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற கரப்பான்பூச்சி கட்சிக்கு போட்டியாக, தற்போது 'மக்கி ஜனதா கட்சி' (MJP) எனப்படும் 'ஈ கட்சி' இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்கள் குறித்து கரப்பான்பூச்சிகள் என்று குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் சமூக வலைதள பக்கம் தொடங்கப்பட்டு, அதில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து, போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்ற அரசியல் உத்தியாளர் அபிஜித் தீப்கே, "அனைத்து கரப்பான்பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?" என்று சமூக வலைதளத்தில் நையாண்டியாக ஒரு பதிவை வெளியிட்டார். அதுவே 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.
வேலையில்லாத் திண்டாட்டம், தேர்வுத்தாள் கசிவு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற இளைஞர்களின் முக்கியப் பிரச்சினைகளை கையில் எடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த இயக்கம் நடத்திய போராட்டம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டங்களை தடுக்க டெல்லியில் 57 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு, கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, "ஒரு சிறிய ஈயை கொல்வதற்கு எதற்காக இவ்வளவு பெரிய சுத்தியலை பயன்படுத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியது. நீதிபதியின் இந்த 'ஈ மற்றும் சுத்தியல்' கருத்தையே தங்களின் ஆயுதமாக மாற்றிய நெட்டிசன்கள், இன்ஸ்டாகிராமில் மக்கி ஜனதா கட்சி என்ற புதிய நையாண்டி பக்கத்தை தொடங்கினர்.
"இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்காக" ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், எந்தவொரு அரசியல் சார்பும் அற்றது என்றும், மக்களின் பேச்சுரிமை மற்றும் ஜனநாயக பாதுகாப்பிற்காக நையாண்டி வழியில் தொடர்ந்து போராடும் என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.