மங்களூரு,
கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதை வெறும் வழிபாடாக பார்க்க தோன்றினாலும், அதன் பின்னணியில் பெரும் அரசியல் கணக்கே அடங்கியிருக்கிறது.
தமிழக அரசியலில் முத்திரை பதித்த முன்னாள் அ.தி.மு.க. முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி சென்றுள்ளனர். இப்போது, அதே பாரம்பரியத்தை முதல்-அமைச்சர் விஜய் கையில் எடுத்துள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., அதில் இருந்து மீண்டு வந்து, தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு இக்கோவிலுக்கு நேரில் சென்று வழிபட்டார். அப்போது, அம்மனுக்கு காணிக்கையாக 1½ கிலோ எடையுள்ள தங்க வாளை வழங்கினார்.
அதேபோல், 2004-ல் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், இங்கு வந்து சண்டி ஹோமம் வளர்த்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். சண்டி ஹோமம் என்பது எதிரிகளை வீழ்த்த நடத்தப்படும் யாகம் ஆகும்.
மகாலட்சுமி, சரஸ்வதி மற்றும் காளி ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாகத் திகழும் இந்த மூகாம்பிகை அம்மனை தரிசிக்க பல ஆண்டு காலமாகவே அரசியல் தலைவர்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வரும்போது, தங்களின் வியூக ஞானம், ஆட்சி ஸ்திரத்தன்மை மற்றும் எதிரிகளை வெல்லும் ஆற்றலை பெறுவதற்காக சண்டி ஹோமம் வளர்த்து அம்மனை வழிபட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தின்போதே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தன்னை முன்னிறுத்திய விஜய், ஆட்சி அரியணை ஏறிய நிலையில், தற்போது டெல்லி சென்று திரும்பியதும் முதல் வெளிமாநில பயணமாக கர்நாடகா சென்று, கொல்லூர் மூகாம்பிகை அம்மனை தரிசித்து இருக்கிறார். அரசியல் எதிரிகளை வீழ்த்தும் திட்டத்துடனேயே அவர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனை வந்து வழிபட்டதாக த.வெ.க.வினர் கூறுகின்றனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.