புதுடெல்லி,
டெல்லி அருகே காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்ராணா. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த நிலையில், தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு தவறி விழுந்தார். இதில் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டு 13 ஆண்டுகளாகப் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் நினைவு திரும்பவில்லை. இதையடுத்து அவரை கருணைக் கொலை செய்யக் கோரி பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பஞ்சாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான ஹரிஷ் ராணா ‘கண்ணியமான முறையில் உயிரிழக்கும் உரிமையை' சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. இந்தியாவிலேயே இத்தகைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர் அவரோடு கடைசி 22 நிமிடங்களை கழித்த வீடியோ வெளியாகி பார்ப்போர் கண்களை குளமாக்கி வருகிறது.
காஸியாபாத் நகரின் அமைதியான அந்தச் சந்தில், அசைவற்றுப்படுத்திருந்த ஹரிஷ் ராணாவின் படுக்கையைச் சுற்றி அமர்ந்து, ஹரீஸை திலகமிட்டு மன்னிப்புக்கேட்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர்காக்கும் கருவிகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது. இளைஞருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஹரிஷ் ராணா உயிரிழந்துவிடுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.