தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்காக.. திருவனந்தபுரம், கொச்சியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் சேவை

தேவைக்கேற்ப கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து மந்திரி தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏ.சி. பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏ.சி. பஸ் சேவை

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் ஏசி பஸ்சேவையை அம்மாநில போக்குவரத்துத்துறை மந்திரி ஜான் நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்களில் வந்த குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை வரவேற்று, அவர்களுக்கு மலர்களையும் ஐயப்பன் படங்களையும் அவர் வழங்கினார்.

அனைத்துப் பயணிகளுக்கும்..

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ரூ.340 மற்றும் கொச்சியின் நெடும்பாசேரி விமான நிலையத்திலிருந்து ரூ.380 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விமானத்தில் வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து மந்திரி தெரிவித்தார்.

முன்பதிவு

அதேபோல, சபரிமலைக்கு தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்களாக செல்வோர் அரசு பஸ்சை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை, ஏறும் இடம், தேதி, நேரம் மற்றும் பயணத்தின் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து நேரடியாக பம்பாவிற்குப் பயணம் செய்து, அதே இடத்திற்குத் திரும்பலாம் என்று போக்குவரத்து மந்திரி கூறினார்.

SCROLL FOR NEXT