புதுடெல்லி,
துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் என எதுவும் சேதப்படுத்தாத வகையில் பாதுகாப்பு படை வீரர்களுக்காக இந்தியாவிலேயே கவச பஸ்கள் தயாரிக்கப்பட்டன.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு சாதாரண பஸ்களில் பயணித்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது இந்தியாவும் தகுந்த பதிலடியை கொடுத்தது. இருப்பினும், வீரர்களின் மரணம் ஆறாத வடுவாகவே இன்றளவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சாதாரண பஸ்களில் வீரர்களை அழைத்துச்செல்வதில் உள்ள பேராபத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் கண்ணிவெடி மற்றும் பதுங்கியிருந்து நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து வீரர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை வீரர்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக, துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் துளைக்காத கவச பஸ்களை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பஸ் இது ஆகும்.
மத்திய அரசு ரூ.187 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 124 கவச பஸ்களை வாங்குவதற்கு 'ஆர்டர்' வழங்கியுள்ளது. ஒவ்வொரு பஸ்சும் 28 வீரர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைத்து இருக்கிறார்கள்.
124 பஸ்களில் 109 பஸ்கள் சி.ஆர்.பி.எப்.புக்கும், 15 பஸ்கள் பி.எஸ்.எப்.புக்கும் ஒதுக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் காஷ்மீர் மற்றும் நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள பதற்றமான முக்கிய வழித்தடங்களில் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.
துப்பாக்கி குண்டுகள் மற்றும் வாகனத்தின் அடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகளின் தாக்கத்தை தாங்கும் வலிமையான கவச கட்டமைப்பை கொண்டிருக்கிறது.
தாக்குதலின்போது டயர்கள் சேதமடைந்தாலோ அல்லது பஞ்சரானாலோகூட வாகனம் நின்றுவிடாமல் தொடர்ந்து வேகமாக சென்று பாதுகாப்பான இடத்தை அடையும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.
பஸ்சின் மேற்பகுதியில் 360 டிகிரி சுழலக்கூடிய துப்பாக்கி பொருத்தும் அமைப்புகள் உள்ளன. இதன் மூலம் வீரர்கள் வாகனத்தை விட்டு வெளியே வராமலேயே அனைத்து திசைகளிலும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க முடியும்.
பஸ்சை சுற்றி நடப்பதை உள்ளிருந்தபடியே துல்லியமாக கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவசர காலங்களில் மற்ற படைப்பிரிவுகளுடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும், டிரோன்களுடன் இணைந்து செயல்படவும் ஏற்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இதில் உள்ளன.
காஷ்மீரின் கடும் குளிர் மற்றும் பாலைவனங்களின் கடுமையான வெப்பம் என எத்தகைய கடினமான சூழலிலும் வீரர்கள் சோர்வடையாமல் பயணிக்க நவீன குளிரூட்டும் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.