புதுடெல்லி
ஆபரேசன் சிந்தூருக்கு பின் முதன்முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்.சி.ஓ.) நவம்பர் 20-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கடந்த 20-ந்தேதி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது, இந்த ஆண்டு இறுதியில் முதன்முறையாக நடைபெற உள்ள நாகரீக பேச்சுவார்த்தை கருத்தரங்க நிகழ்ச்சியில், எல்லா உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து பேசினார்.
இந்நிலையில், இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்க வரும்படி, உறுப்பு நாடாக உள்ள பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளையும் இந்தியா அழைத்துள்ளது. இந்த பலதரப்பு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுத்த அழைப்புக்கும், பாகிஸ்தான் உடனான இருதரப்பு உறவுகளுக்கும் இடையே எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, பாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய மற்றும் கலாசார மந்திரி அவுரங்கசீப் கான் கிச்சி அழைக்கப்பட்டு உள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடந்த வெளியுறவு துறை மந்திரிகளின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்றது.
அதன்பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, இரு நாடுகள் இடையே போர் ஏற்படுவதற்கான பதற்ற நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மே 7-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஆபரேசன் சிந்தூர் பெயரில் இந்தியா தரப்பில் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் தஜிகிஸ்தான் நாட்டின் துஷான்பே நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கவுன்சில் தலைவர்களுக்கான கூட்டத்தில் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரியான இஷாக் தார் முன்னிலையில், பயங்கரவாத ஒழிப்பில் கூட்டு நடவடிக்கையின் அவசியம் பற்றி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அதனை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பது ஏற்று கொள்ள முடியாதது என்றும் பாகிஸ்தானை நேரடியாக தாக்கிப்பேசினார்.