தேசிய செய்திகள்

அடுத்த 48 மணிநேரத்திற்கு... ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

அதிகாரப்பூர்வ தகவல்களை அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டு உள்ளது.

புதுடெல்லி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது. ஆனால், அந்த காலக்கெடு இன்றிரவு 8 மணி வரையே நீடிக்கும் என டிரம்ப் கூறினார்.

அதன்பின்னர் ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார். இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது என ஈரானை கடும் எச்சரிக்கை செய்துள்ளார். அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

உலக வரலாற்றில் இன்றிரவு மிக முக்கிய தருணங்களில் ஒன்றாக இருக்கும். 47 ஆண்டு கால மிரட்டல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இந்த பரபரப்பான சூழலில் ஈரானிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அடுத்த 48 மணிநேரத்திற்கு இந்தியர்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே இருங்கள். அனைவரும் வீட்டிலேயே தங்கியிருங்கள். அடுக்குமாடி கட்டிடங்களில் மேல் தளத்தில் இருக்க வேண்டாம் என்றும் அதனை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களை அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டு உள்ளது.