தேசிய செய்திகள்

உ.பி.யில் இளம்பெண்ணுக்கு கட்டாய திருமணம் - முதல் இரவில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

மிதிலேஷ் குமாரியை மிரட்டியதோடு, அவரை அடித்து கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மிதிலேஷ் குமாரி. இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அப்போது மிதிலேஷ் குமாரி, தான் ஒரு வாலிபரை காதலித்து வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் மிதிலேஷ் குமாரியின் காதலை ஏற்க மறுத்த பெற்றோர், அவருக்கு தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்தனர். தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், மிதிலேஷ் குமாரி தனது பெற்றோரிடம் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், மிதிலேஷ் குமாரியை மிரட்டியதோடு, அவரை அடித்து கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட தேதியில் அவருக்கும், தரம் சிங்கிற்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் மணமகனும், மணமகளும் முதல் இரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது மிதிலேஷ் குமாரி தனது கணவர் தரம் சிங்கிடம், தனக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருப்பதையும், பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திருமணத்தில் தனக்கு கொஞ்சமும் விருப்பம் என்று கூறிய அவர், ‘என்னால் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது’ என்று கூறியுள்ளார். முதல் இரவு அறையில் தனது மனைவி இவ்வாறு கூறியதைக் கேட்டு தரம் சிங் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் இந்த சூழ்நிலையை அவர் நிதானமாக கையாண்டார்.

அதன்படி மிதிலேஷ் குமாரியின் நிலை குறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் எடுத்துரைத்தார். இதையடுத்து இந்த விவகார உடனடியாக ஹாமீர்புர் காவல் நிலையம் வரை சென்றது. காவல் நிலையத்தில் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் மிதிலேஷ் குமாரி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இரு வீட்டாரும் இந்த விஷயத்தை சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினர். இதன்படி, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மிதிலேஷ் குமாரிக்கும், தரம் சிங்கிற்கும் விவாகரத்து செய்து வைக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் சில மணி நேரத்திற்குள் இவர்களின் திருமணம் முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரம் குறித்து தரம் சிங் கூறுகையில், மிதிலேஷ் குமாரி இது குறித்து தன்னிடம் முன்பே கூறியிருந்தால் இரு வீட்டாருக்கும் இந்த சங்கடம் ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.