வெளிநாட்டு பணம்  
தேசிய செய்திகள்

கொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.3.5 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்; 7 பேர் கைது

விமான நிலையத்திலிருந்த மேலும் சில பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்கத்தா,

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்கு பயணம் செய்யவிருந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3.51 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:-

தீவுர சோதனை

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையம் வழியாக வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த 6-ந் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட தயாராக இருந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனர்.

வெளிநாட்டு கரன்சிகள்

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த சில பயணிகளின் உடைமைகள் மற்றும் கைப்பைகளை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்தனர். அதில், புத்தகங்கள், பைகள், காலணிகள் மற்றும் துணிகளுக்குள் அதிநவீன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்டு உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

7 பேர் கைது

இதனையடுத்து, ரூ.3.12 கோடி மதிப்பிலான அந்த வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்த அதிகாரிகள், அவர்கள் மீது சுங்கச் சட்டம் மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மொத்தம் ரூ.3.51 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

இதேபோல், அங்கிருந்த மேலும் சில பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அந்த பயணிகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரே நாளில் மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT