புதுடெல்லி
டெல்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நாடுகள் கலந்துகொண்டன.
இதனை முன்னிட்டு, அந்நாடுகளின் தலைவர்களுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் விடுத்த அழைப்பையேற்று அவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இதன்படி, குவாட் வெளியுறவு துறை மந்திரி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜப்பானிய வெளியுறவு துறை மந்திரி தோஷிமித்சு மோதெகி இந்தியாவுக்கு வருகை தந்தார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஜப்பானின் வெளியுறவு துறை மந்திரி தோஷிமித்சு மோதெகியை வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி. இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை முன்னெடுத்து செல்வதில், இந்தியா-ஜப்பான் இடையிலான 'சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மை' வகிக்கும் முக்கிய பங்கை மீண்டும் வலியுறுத்தினோம்.
ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்கை வரவேற்பதில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விநியோக சங்கிலியின் நெகிழ்ச்சித்தன்மையை உறுதி செய்தல் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியாவின் விரிவான மூலோபாய கூட்டாண்மை குறித்து விவாதித்தோம். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.