தேசிய செய்திகள்

ஈரான் உயர் தலைவர் காமேனி மறைவுக்கு இந்தியா இரங்கல்

கடந்த மாதம் 26-ம் தேதி காமேனி கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் கடந்த 28-ந்தேதி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.

மறுபுறம் புதிய உச்சபட்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளையும் அந்த நாடு செய்து வருகிறது. இதற்காக 88 மூத்த மதத்தலைவர்களை கொண்ட நிபுணர் கவுன்சில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்யும் பணிகள் ரகசியமாக நடைபெறும் என்பதால், புதிய தலைவர் யார்? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாமல் உள்ளது. எனினும் தற்போது தங்களுக்கான அடுத்த உச்சபட்ச தலைவரை ஈரான் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் மகன் முஜ்தபா காமேனியை அடுத்த உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே எந்த அரசு பணிகளிலோ அல்லது பதவிகளிலோ தேர்வு செய்யப்படாதபோதும், அவரை புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே காமேனி மறைவிற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும், 7 நாட்கள் பொது விடுமுறை விடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட காமேனிக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் ஈரான் தூதரகத்துக்கு சென்று தூதரிடம் இரங்கலை தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அலி காமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கையெழுத்திட்டு, தூதரிடம் இரங்கலை தெரிவித்தார்.