அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பர்டி சபாரி பூங்காவில், சிங்கத்தை பைக்கில் துரத்திச் சென்ற வனத்துறை ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விதிமுறைகள் மீறல்
விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதிய நிலையில், மாலை நேரத்தில் உணவளிப்பதற்காக சிங்கங்களை அவற்றின் அடைப்பிற்குள் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. வழக்கமாக ஜீப் போன்ற பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்தியே சிங்கங்களை அழைத்து செல்வார்கள்.
ஆனால் வழக்கமான ஜீப்பில் செல்லாமல், திசைமாறி சென்ற சிங்கத்தை பிடிக்க, 3 ஒப்பந்த ஊழியர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தனித்தனி பைக்குகளில் சிங்கத்தை விரட்டி சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்த, வனத்துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். சிங்கத்தை துன்புறுத்தும் நோக்கமில்லை என விளக்கமளிக்கப்பட்ட போதிலும், விதிகளை மீறியது உறுதியானதால் சம்பந்தப்பட்ட 3 ஒப்பந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.