தேசிய செய்திகள்

காபி தோட்டத்தில் நடைபயிற்சி; காட்டு யானை தாக்கி முன்னாள் ஐ.ஜி.யின் மனைவி உயிரிழப்பு

வனப்பகுதியை அருகே உள்ள தங்களது காபி தோட்டத்துக்கு சந்தியா நடைபயிற்சிக்கு சென்றார். அங்கு தொழிலாளர்களின் வேலையை மேற்பார்வையிட்ட அவர் பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டை தாலுகா திதிமதி அருகே கொன்னனகட்டே கிராமத்தில் வசித்து வருபவர் அன்னலமடா சுனில் அச்சய்யா. இவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஆவார். இவரது மனைவி சந்தியா (வயது 58). அன்னலமடா சுனில் அச்சயா, பணி ஓய்வுக்கு பிறகு பொன்னம்பேட்டையில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

நடைபயிற்சி

இவருக்கு சொந்தமாக அங்கு வனப்பகுதியை ஒட்டி காபி தோட்டம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியை ஒட்டி உள்ள தங்களது காபி தோட்டத்துக்கு சந்தியா நடைபயிற்சிக்கு சென்றார். அங்கு தொழிலாளர்களின் வேலையை மேற்பார்வையிட்ட அவர், பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார்.

அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காபி தோட்டத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியா, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது காட்டு யானை அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்று ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் கால் முறிந்து பலத்த காயமடைந்து சந்தியா உயிருக்கு போராடினார்.

தீவிர சிகிச்சை

இதனை பார்த்த காபி தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானையை விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானை, ஆக்ரோஷமாக தொழிலாளர்களை விரட்டியது. இதனால் தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் விரைந்து வந்து சந்தியாவை மீட்டு கோணிகொப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தியா இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.