போபால்
மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் துவிஷா சர்மா (வயது 31). இவருக்கு, வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவர் வீட்டில் தூக்கு போட்டு துவிஷா தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என கூறி உடலுக்கு இறுதி சடங்கு செய்யாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடைய புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட துவிஷா சர்மாவின் குடும்பத்தினரை மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரசு சார்பில் இந்த வழக்கில் அனைத்து வகையிலான ஆதரவும் வழங்கப்படும் என அப்போது அவர்களுக்கு உறுதி கூறினார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி கடிதம் எழுதுவோம் என்றும் கூறினார். இந்நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அரசு பரிந்துரை செய்துள்ளது. துவிஷாவின் உடலுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு மறுபிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜபல்பூர் கோர்ட்டில் சரண் அடைந்த சமர்த் சிங்கை, போலீசார் ஜபல்பூரில் இருந்து போபாலுக்கு அழைத்து வந்தனர். அவருக்கு போபால் கோர்ட்டு 7 நாள் போலீஸ் காவல் விதித்ததுடன், அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
அவர் போதைக்கு அடிமையாகி விட்டார் என கணவரின் வீட்டார் கூறுகின்றனர். ஆனால், வரதட்சணை கொடுமை செய்தது அவரை மரணத்தில் தள்ளி விட்டது என்று பெற்றோர் கூறுகின்றனர்.