கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, மேற்கு வங்காளத்தின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக உள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது டிண்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நபன்னாவில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர்.எம்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
2021-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்த அசோக் டிண்டா, மொய்னா தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு, சந்தன் மண்டல் என்பவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார்.
திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்குமிக்க வேட்பாளரை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கான அங்கீகாரமாக டிண்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி பதவியேற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் 35 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் முதல்-மந்திரி உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
2009 முதல் 2013 வரை இந்திய அணிக்காக விளையாடிய அசோக் டிண்டா, 13 ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த டி20 பந்துவீச்சாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி மற்றும் புனே உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடிய அவர், மொத்தம் 78 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.