லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் நானக் ராம் போஜி (வயது 55). இவர் பாஜக மாநில அரசின் மந்திரி சபையில் மந்திரியாக செயல்பட்டுள்ளார். நானக் ராம் தற்போது பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளாரக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், லக்னோவின் டர்லுல் சொபா பகுதியில் எம்எல்ஏக்கள் வசிப்பதற்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு இன்று நானக் ராம் போஜி சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடிக்கு சென்ற நானக் ராம் திடீரென அங்கிருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் நானக் ராம் போஜி படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நானக் ராம் போஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். நானக் ராம் போஜி தவறி விழுந்தாரா? அல்லது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.