புதுடெல்லி
டெல்லியில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் (வயது 75) இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், சில நிமிடங்கள் சுயநினைவிழந்து கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத் மற்றும் மருத்துவ குழு ஒன்றும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று அவரை பரிசோதனை செய்தனர். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.
அவருடைய உடல்நிலையை கவனத்தில் கொண்டு உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை, கார்டியோ-நியூரோ பிரிவில் சேர்த்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூலையில் அவர் பதவி விலகும் வரை, நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக தன்கர் பதவி வகித்திருக்கிறார்.