புதுடெல்லி,
பிரதமர் மோடி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக உஸ்பெகிஸ்தானுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தானுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை மறுதினம்(29-ந்தேதி) பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் அவர், இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதனை தொடர்ந்து கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிஷ்கெக்கில் தலைநகர் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், தற்போதைய மாறிவரும் பாதுகாப்புச் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.