ரோத்தக்
டெல்லியில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் ரேவாரி மாவட்டத்தில் பவால் நகரில் பானிபூர் சவுக் பகுதியருகே டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், டெல்லி சுபாஷ் நகரை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், பருப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென காரின் மீது கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த தீபக் குமார் (வயது 29), அவருடைய மனைவி திவ்யா (வயது 28), தீபக்கின் சகோதரி சரிதா மற்றும் மற்றொரு உறவினர் நிதின் (வயது 40) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அவர்களுக்கு இடையே நடுவில் அமர்ந்திருந்த 5 வயது மருமகன் பலத்த காயங்களுடன் தப்பினார். அவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் உள்ள கது ஷியாம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு டெல்லி திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.